Friday, April 6, 2018

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் (மாப்பிள்ளை சுவாமி)


ஊர்                                        :               திருவீழிமிழலை, திருவாரூர், தமிழ்நாடு

மூலவர்                                :               வீழிநாதேஸ்வரர்,விழியழகர், நேத்திரார்ப்பணேசுவரர்

உற்சவர்                               :               கல்யாணசுந்தரர்

தாயார்                                  :               சுந்தரகுசாம்பிகை

தல விருட்சம்                     :               வீழிச்செடி

தீர்த்தம்                                :               வீஷ்ணுதீர்த்தம் (முதலான 25 தீர்த்தங்கள்)



பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.


விழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.

தொழில்நுட்பம்

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

சங்ககாலம்

சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.
மிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.

வழிபட்டோர்  : திருமால் (சக்கராயுதம் பெற), சுவேதகேது எனும் மன்னன் (எமபயம் நீங்க), வசிட்டர், காமதேனு, ரதிதேவி, மனு

மகா கும்பாபிஷேகம் 2013


2013 ஆம் ஆண்டு 11.09.2013 (ஆவணி 26) அன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



ஐயன்பேட்டை சிவன் கோயில்



அப்பரும், சுந்தரரும் இறைவனாரிடமிருந்து பெற்ற படிக்காசுகளை மாற்றிப் பொருள் பெற்ற கடைத்தெரு ஐயன்பேட்டை என்று இக்காலத்தில் வழங்கப்படுகிறது. இங்கே படியளந்த நாயகி உடனாய செட்டியப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது.



சங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).

புராண பெயர்(கள்)           :     பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிணகாசி, சண்மங்களத்                தலம்,          சுவேத கானனம், ஆகாச நகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம்,திருவீழிமிழலை
  

Saturday, April 22, 2017

மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்

தலத்தின் சிறப்பு:

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். 

இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. 

சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. 

அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

                இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது.

            அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில் பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தச் சிறப்பு:  

கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. 

                    பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது. மேலும் இத்தலம் தோஷ நிவர்த்தித் தலமாகவும் திகழ்கிறது. பிரமஹத்தி தோஷம், நட்சத்திர தோஷம், சந்திர திசை, சந்திர புத்தி இவற்றால் ஏற்படும் தோஷம், சனிதிசை, ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்து சனி இவற்றால் ஏற்படும் தோஷம் யாவும் தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் விளங்குகிறது.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி ஆலயம்



               பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். 
                        இத்தலமும் திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். 
                 
              ஆனால் இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள் வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது.

                          ராகு கேது தோஷம் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும். திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியினமை, ஜாதகத்தில் பித்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்க் பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.


                    ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மஹாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான்.
                  உண்மை அறிந்த மஹாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மஹிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். 

                                    


திருநாகேஸ்வரம் ஆலயம்
 
வெளித் தோற்றம்

கோவில் அமைப்பு: 
                ஒரு காலத்தில் இத்தலம் செண்பக வனமாக காட்சி அளித்தது. செண்பக மரத்து நிழலில் சிவபெருமான் லிங்க வடிவில் எழுந்தருளியிருந்தார். இதனால் இறைவனுக்கு சண்பகாரண்யேஸ்வரர் என்பு பெயர் ஏறபட்டது. ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இத்தலம் அமைந்துள்ளது. மற்ற 3 திசைகளிலும் கோபுரங்களையும் மூன்று பிரகாரங்களையும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. 
                        கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே வந்ததும் நிருத்த கணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் சூரியபுஷ்கரணியும், வலது பக்கம் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. புஷ்கரணி சமீபம் எழுந்தருளியுள்ள மழுவாயுதம் தரித்த விநாயகரைப் போற்றித் துதித்து உள்ளே செல்ல வேண்டும். கருவறையில் மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், நடராஜர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. சேக்கிழார்,அவரது தம்பி பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை மூவருக்கும் இத்திருக்கோவிலில் தனி தனிச் சந்நிதி உள்ளது.

                    அம்பாளுக்கு இத்தலத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதிக்கு அருகில் பிறையணிவாள் நுதல் அம்மை தரிசனம் தருகிறாள். பிறை என்றால் சந்திரன். அம்பாளின் பெயருக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி அன்று மாலை வேளையில் சந்திரனின் ஒளி அம்பாள் மேல் விழுகின்றது. கார்த்திகை மாதத்து கெளர்ணமி நாளில் அன்னையை தரிசிக்க பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.

              இது தவிரத் தனிக்கோயிலில் மற்றொரு இறைவியாக "கிரி குசாம்பிகை" சந்நிதியும் உள்ளது. இங்கு அன்னை தவக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். இவள் உருவம் சுதையால் ஆனதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். கிரி குசாம்பிகைக்கு இருபுறமும் லட்சுமியும், சரஸ்வதியும் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர்.

                கிரி குசாம்பிகை இங்கு கோவில் கொண்டதற்கு காரணமானவர் பிருங்கி முனிவர். இந்த முனிவர் சிவனை மட்டுமே வணங்குபவர். அருகிலுள்ள தன்னையும் சேர்த்து வணங்காமல் சிவனை மட்டும் வணங்கிச் செல்லும் பிருங்கி முனிவர் மேல் கோபம் கொண்ட சக்தி அர்த்தநாரீஸவரர் ஆக இறைவனின் இடது பாகத்தைப் பெற்றாள். அப்போதும் ஒரு வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீஸவரர் வடிவத்தில் ஈசனை மட்டும் துளைத்துக் கொண்டு வலம் வந்தார். அதைக் கண்டு வெகுண்ட அம்மை தன் அம்சமான சக்தியை, அதாவது முனிவரின் சதையையும், இரத்தத்தையும் எடுத்துக் கொண்டாள். 
               எலும்புக் கூடாக மாறி மெள்ள மெள்ள நடமாடினாலும் சிவனை மட்டும் வணங்கும் தன் செயலை பிருங்கி முனிவர் மாற்றிக் கொள்ளவில்லை. தன் பக்தனின் வேதனைக்குக் காரணமான அம்பிகை மேல் கோபம் கொண்ட இறைவன் அவளை பூவுலகம் சென்று சிலகாலம் தன்னை விட்டுப் பிரிந்து வழிபட்டு வரும்படியும் மதுரையில் பினபு அன்னையை திருமணம் செய்து கொள்தாகவும் கூறிவிட்டார். சாபம் பெற்ற அன்னைக்கு ஆறுதலாக அலைமகளும், கலைமகளும் அவளுக்கு துணை இருப்பார்கள் என்றும் இறைவன் கூறினார். தேவியான பார்வதி பூலோகத்தில் செணபகவனமான இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த போது அவளுக்குத் துணையாக லட்சுமியும், சரஸ்வதியும் எழுந்தருளினர். இந்தக் கோலத்தையே திருநாகேஸவரம் கோவிலில் கிரிகுசாம்பிகை சந்நிதியில் நாம் தரிசிக்கிறோம்.

பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான் திருநாகேஸ்வரரின் மேல் கொண்ட அபரிமிதமான ஈடுபாட்டின் காரணமாக கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து இரண்டாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும நிர்மாணித்துள்ளார். தம்முடைய சொந்த ஊரான குன்றத்தூரில் (சென்னைக்கு அருகில் உள்ளது) தாம் கட்டிய கோயிலுக்கும் திருநாகேஸ்வரம் என்றே பெயரிட்டுள்ளார். இவருக்குத் திருவடிஞானம் கிடைத்ததும் இத்தலத்திலேதான் என்பது இன்னுமொரு சிறப்பாகும். ஆலயத்தில் சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் நின்ற கோலத்தில் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகே மயில் உள்ளது. கிரி குசாம்பிகை சந்நிதி உள்ள தனிக் கோவிலில் பாலசுப்பிரமணியர் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் ஒரு காலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் இருந்கதாகக் குறிப்புக்கள் உள்ளன. இன்று கோயிலின் உள்ளேயே சூரிய புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் காணப்படுகின்றது. இத்தீர்த்தத்தின் வலப் பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுவதோடு ஒரு தேரின் மீது இம்மண்டபம் அமைந்திருப்பதுபோல மண்டபத்தின் கீழே கற்களாலான சக்கரங்களுடன் சுற்றிலும் நாட்டியமாடுவதுபோன்ற பாவங்களில் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கே வழிபட்டு கௌதமர் அகலிகையோடு மீண்டும் இணைந்தார். நளன் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். பாண்டவர்கள் தாங்கள் இழந்த நாட்டை மீண்டும் பெற்றனர். இத்தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி நாகேசுவரரை வழிபட்டு சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கினான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழாரின் ஈடுபாடு கண்டு இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசிப் பூச நன்னாளில் சேக்கிழார் திருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடைபெறும். பிரதோஷம் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பிரதி ஞாயிறுதோறும் மாலை ராகு கால நேரத்தில் ராகுவுக்குப் பாலாபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. ராகுவைப் போலக் கொடுப்பாரும் இல்லை; கேதுவைப்போல் கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி.

காலையில் குடந்தைக் கீழ்கோட்டத்து இறைவனையும், நண்பகலில் திருநாகேஸ்வரம் இறைவனையும், மாலையில் திருப்பாம்பரம் இறைவனையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். 
சிவஸ்தலம் பெயர்


திருநாகேஸ்வரம்
இறைவன் பெயர்சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர்
இறைவி பெயர்கிரிகுசாம்பிகை, பிறையணிவாள் நுதல் அம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 3
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து தெற்கே 1 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.
ஆலய முகவரிசெயல் அலுவலர்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்
திருநாகேஸ்வரம்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612204

தொலைபேசி: 0435 2463354

ஆலயம் தினந்தோறும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.



ROUTE MAP

Wednesday, April 19, 2017

நாகேஸ்வரர் திருக்கோவில், திருகுடந்தை

 கோவில் விபரங்கள்:  

                        கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. தெற்கிலுள்ள போபுர வாயில் வழியாகவும் இந்த வெளிப் பிரகாரத்திற்கு வரலாம்.

                அடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன. இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும். குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். 

              கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்திலுள்ள மற்ற சந்நிதிகள் - பிரளயகாலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள், வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ்கந்தர், சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன. 

           இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.

                   இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர்திருகுடந்தை கீழ்கோட்டம்
இறைவன் பெயர்நாகேஸ்வரர்
இறைவி பெயர்பிரஹந்நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.
ஆலய முகவரிஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணம்
கும்பகோணம் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 612001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.